சோலையாறு அணை நீர்மட்டம் 87 அடியாக சரிந்தது
போதிய மழை இல்லாததாலும், தொடர்ந்து தண்ணீர் திறப்பு காரணமாகவும் சோலையாறு அணை நீர்மட்டம் 87 அடியாக சரிந்தது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்து.
வால்பாறை அருகே 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதலே தென் மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வந்தது. ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்தது. இதனால் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணை நீர்மட்டம் ஜூன் மாதம் முதல் தேதியே 79 அடியாக உயர்ந்தது. ஜூன் மாதம் 24-ந் தேதி 100 அடியை தாண்டியது.
ஜூலை மாதம் 10-ந்தேதி சோலையாறு அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. இதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அணையின் மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 5 -ந் தேதி வரை சோலையாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 160 அடியில் இருந்து வந்தது. இரண்டு மின் நிலையங்களிலும் மின் உற்பத்தியும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூலை 25-ந் தேதி 100 அடியை தாண்டியது. அதன் பின் படிப்படியாக மழை குறைந்து விட்டது. இந்த ஆண்டில் போதிய மழை இல்லாததாலும், தொடர்ந்து நீர் திறப்பு காரணமாகவும் சோலையாறு அணையின் நீர்மட்டம் 87 அடியாக சரிந்து உள்ளது. கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 12.40 சதவீதம் மழை குறைவாக பெய்து உள்ளது. மேலும் அணையில் மணல் திட்டுகள் வெளியே தெரிகிறது.மேலும் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.
கடந்த 3 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை பொய்த்து போனதற்கான காரணத்தை தமிழ்நாடு அரசின் நீர் வள ஆதாரத்துறை, வனத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் உரிய ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








