சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது


சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 24 July 2023 8:00 PM GMT (Updated: 24 July 2023 8:00 PM GMT)

வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்ததால், சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்ததால், சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது.

கனமழை

வால்பாறையில் கடந்த ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. பருவமழை பரவலாக பெய்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. எஸ்டேட் பகுதிகளிலும் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாழைத்தோட்டம் ஆற்றில் தண்ணீர் கரையை தொட்ட படி சென்றது.

கனமழை காரணமாக சோலையாறு சுங்கம் ஆறு, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. குறிப்பாக சோலையாறு பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு 1,853 கனஅடி தண்ணீர் சுரங்க கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் அந்த தண்ணீர் வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சுரங்க கால்வாய் வழியாக சோலையாறு அணைக்கு செல்கிறது.

நீர்மட்டம் உயர்ந்தது

ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் தண்ணீர் சோலையாறு அணையில் சேகரமாகிறது. அங்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. சோலையாறு அணைக்கு வினாடிக்கு 3,878 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் மாற்றுப்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சோலையாறு மின் நிலையம்-1-ல் உள்ள மாற்றுப்பாதை வழியாக 2,692 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆனைமலை பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் ஆனைமலை-சேத்துமடை சாலையோரம் நின்ற புளிய மரம் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

மழையளவு

நேற்று காலை 6 மணி நிலவரப்படி மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

வால்பாறை-89, அப்பர் நீராறு-106, லோயர் நீராறு-73, காடம்பாறை-28, சர்க்கார்பதி-32, வேட்டைக்காரன் புதூர்-21.6, பெருவாரிபள்ளம்-17, அப்பர் ஆழியார்-7,பொள்ளாச்சி-14, நல்லாறு-19. அதிகபட்சமாக அப்பர் நீராறு பகுதியில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.


Next Story