சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது


சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 20 Oct 2023 1:30 AM IST (Updated: 20 Oct 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பெய்த தொடர் மழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறையில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கிடையே சோலையாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வால்பாறையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை 12 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதனால் அணை அதன் முழுக் கொள்ளவை எட்டாத நிலை இருந்து வந்தது.இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து வந்தனர். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. மேலும் இந்த பருவமழை அவ்வப்போது லேசான மழையாகவும் சில சமயங்களில் கனமழையாகவும் பெய்து வருகிறது.


கடந்த 10 நாட்களாக வால்பாறை பகுதியிலும், சில சமயங்களிலும் எஸ்டேட் பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதனால் சோலையாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக கடந்த 44 நாட்களுக்கு பிறகு மீண்டும் சோலையாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

வால்பாறை பகுதியை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை பெரியளவில் கிடைக்காது. ஆனாலும் கேரள மாநிலத்தில் கனமழை பெய்து கொண்டிருப்பதால் அதன் தாக்கமாக வால்பாறை பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருப்பதால் சோலையாறு மின் நிலையம் -1 இயக்கப்பட்டு தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்குப் பின் வெளிவரும் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆழியாறு அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சோலையாறு அணை ஒரு முறை கூட முழு கொள்ளளவான 160 அடியை எட்டாத நிலையில் அவ்வப்போது கிடைத்த மழை காரணமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story