சோலையாறு அணை நீர் மட்டம் 100 அடியை தாண்டியது


சோலையாறு அணை நீர் மட்டம் 100 அடியை தாண்டியது
x

வால்பாறையில் மழை பெய்து வருவதால் சோலையாறு அணை நீர் மட்டம் 100 அடியை தாண்டியது

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் மழை பெய்து வருவதால் சோலையாறு அணை நீர் மட்டம் 100 அடியை தாண்டியது.

சோலையார் அணை

பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தின் (பி.ஏ.பி.) முக்கிய அணை களாக சோலையாறு அணை, கீழ்நீரார் அணை, மேல்நீரார் அணை உள்ளது. இதில் கீழ்நீரார் மற்றும் சோலையாறு அணைகளில் மட்டும் தண்ணீரை தேக்கி வைக்கும் வசதி உள்ளது.

இதில் சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி 72 சதுர கிலோமீட்டர், நீரார் அணை 39 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

மேல்நீரார் அணைக்கு வரும் தண்ணீரை சுரங்க கால்வாய் வழியாக சோலையாறு அணைக்கு அனுப்பும் வசதி உள்ளது.

இது போல் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் பெய்யும் மழை நீர் ஆங்காங்கே உள்ள ஆறுகள் வழியாக சோலையாறு அணையை சென்றடைகிறது.

மின் நிலையங்கள்

இங்கு ஜூன் மாதம் முதல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு சோலையாறு மின் நிலையம்-1 இயக்கப்படுகிறது. அதன் மூலம் 84 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதன்பிறகு வெளியாகும் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.

அதேபோல் சோலையாறு மின் நிலையம்-2 இயக்கப்பட்டு 16 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பிறகு வெளியாகும் தண்ணீர் தமிழக கேரள நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

100 அடியை தாண்டியது

சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அதன் நீர்மட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24-ந் தேதி கனமழை காரணமாக 100 அடியை தாண்டியது. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் இருந்து பெய்த மழை மற்றும் கோடைமழை காரணமாக நேற்று 100 அடியை தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் முழுமையாக தொடங்க வில்லை. ஆனாலும் வெப்ப சலனம் மற்றும் புயல் காரணமாக மழை பெய்து வருகிறது.

மேலும் தென்மேற்கு பருவ மழை இந்த வாரத்தில் தொடங்கி விடும் என்பதால் இந்த ஆண்டு சோலையாறு அணை விரைவில் தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வால்பாறை சுற்று வட்டார பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 1 மணிநேரம் கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story