நீர்வரத்து குறையாததால் 71 அடியில் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்


நீர்வரத்து குறையாததால்  71 அடியில் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2024 10:00 PM GMT (Updated: 19 Jan 2024 10:01 PM GMT)

வைகை அணை மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் 19-ந் தேதி அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து வைகை அணையில் இருந்து பாசனம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் 58-ம் கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், வைகை அணைக்கான நீர்வரத்து குறையவில்லை.

இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி முதல் தற்போது வரை முழுக்கொள்ளளவான 71 அடியிலேயே நீடிக்கிறது. இதன் காரணமாக வைகை அணை மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து ஒரு மாதமாக வைகை அணை நீர்மட்டம் நிரம்பிய நிலையிலேயே உள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் வினாடிக்கு 837 கனஅடியாக உள்ளது.


Next Story