குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஆறுபோல் ஓடிய தண்ணீர்
குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது.
நெல்லை மாநகராட்சியில் அரியநாயகிபுரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரும் பகுதி பணி முடிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் நேற்று சோதனை ஓட்டம் நடத்திய போது குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
இதனால் முருகன் குறிச்சி சாலை பகுதியில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியில் வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதே போல் சமாதானபுரம் மகளிர் போலீஸ் நிலையம் பகுதியில் ஓர் இடத்தில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் அந்த பகுதியில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். சோதனை ஓட்டம் என்பதால் குழாய்களில் உடைப்பு ஏற்படும் பகுதிகளில் உடனுக்குடன் சீரமைத்து நீரோட்டத்தை சரி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.