குடிநீர் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல் வெளியேறிய தண்ணீர்
வேலூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் வெளியேறியது.
நீர்வீழ்ச்சி போன்று
வேலூர் மாநகராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக அரியூர் பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் சுமார் 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் மூலம் அரியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது ஏ.ஜி.நகர் பகுதியில் இருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறி 20 அடிக்கும் மேல் சென்று நீர்வீழ்ச்சி போன்று கொட்டியது.
இதைப்பார்த்த அப்பகுதிமக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அருகில் மின்கம்பம், மின் வயர்கள் சென்றதால் அதன்மீது தண்ணீர் பட்டதால் மின் விபத்து ஏற்பட கூடும் என்பதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் கொண்டனர். இதுகுறித்து மின் அதிகாரிகளுக்கும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சரி செய்யும் பணி
அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மின் தடை செய்யப்பட்டன. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தண்ணீர் வினியோகத்தை நிறுத்தி குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குடிநீர் வினியோகம் செய்யப்படும் குழாய் வளைவு பகுதியில் ஏற்கனவே ஏதோ ஒரு வாகனம் மோதி சேதம் அடைந்திருந்தது. தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டதால் குழாய் உடைந்து தண்ணீர் பீறிட்டு வெளியே வந்தது. தற்போது குழாய் சரி செய்யும்பணி நடைபெற்று வருகிறது என்றனர்.