தேயிலை தோட்டங்களை சூழ்ந்த தண்ணீர்
வால்பாறையில் பரவலாக மழை பெய்தது. சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தேயிலை தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.
வால்பாறை,
வால்பாறையில் பரவலாக மழை பெய்தது. சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தேயிலை தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.
உபரிநீர் வெளியேற்றம்
வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தொடர்ந்து வால்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. இதனால் கடந்த ஜூலை 10-ந் தேதி பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து சேடல்பாதை வழியாகவும், மின் நிலையங்கள் மூலமாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இருப்பினும், சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வால்பாறை பகுதியில் மழை பெய்யாமல் இருந்தது. மழை குறைந்ததால், பகலில் வெயில் அடித்தது.
தேயிலை தோட்டங்கள்
இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 162 அடியில் இருந்து 160 அடியாக குறைந்தது. கடந்த சில நாட்களாக நீர்மட்டம் 160 அடியாக இருந்து வருகிறது. சேடல்பாதை வழியாக குறைந்த அளவிலான தண்ணீர் மட்டும் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் அதிகமாக உள்ளது.
இதனால் கடந்த 44 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் வால்பாறையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. வால்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மழை காரணமாக வால்பாறையில் கடும் குளிர் நிலவுகிறது.