உலக நன்மை வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோதம் - அழைப்பிதழ் வைத்து கிராம மக்கள் அழைப்பு


உலக நன்மை வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்து வைத்த வினோதம் - அழைப்பிதழ் வைத்து கிராம மக்கள் அழைப்பு
x

உத்திரமேரூர் அருகே உலக நன்மைக்காக மரங்களுக்கு திருமணம் செய்து வைத்து கிராமத்தினர் வினோத திருமணம் நடத்தி வைத்தனர்.

சென்னை

உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் மிகவும் பழமையான கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. இந்த அரச மரத்தை ஒட்டியவாறு சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரம் ஒன்று சுயம்புவாக தோன்றி தானாக வளரத் தொடங்கியது. இதனை கிராம மக்கள் தினந்தோறும் காலை, மாலை என இருவேளைகளிலும் வழிபடத் தொடங்கினர்.

இந்தநிலையில் உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைத்து வழிபாடு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. அதில் மணமகன் அரசன் என்றும், மணமகள் வேம்பு நாயகி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. காரணைமண்டபம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வினியோகம் செய்யப்பட்டது.

கிராம மக்கள் புடைசூழ திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அரச மரத்துக்கு பட்டு வேட்டியும், வேப்பமரத்துக்கு பட்டு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமணச்சடங்கு நடத்தப்பட்டது.

2 மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளம் முழங்க, கிராம மக்கள் புடைசூழ அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கிராம மக்கள் அனைவரும் வழிபட்டனர். இந்த வினோத திருமணத்துக்கு வந்திருந்த கிராம மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவுடன் விருந்து அளிக்கப்பட்டு தாம்பூலப்பை வழங்கப்பட்டது. இதில் காரணைமண்டபம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story