குப்பைகளால் மூடப்பட்ட கிணறு


குப்பைகளால் மூடப்பட்ட கிணறு
x

குப்பைகளால் மூடப்பட்ட கிணறு நிலத்தடி நீராதாரம் பாழாகும் அபாயம்

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் பகுதியில் குப்பைகளைக் கொட்டி கிணற்றை மூடியுள்ளதால் நிலத்தடி நீராதாரம் பாழாகும் நிலை உள்ளது.

பொதுக்கிணறு

ஒரு காலத்தில் மீசையை முறுக்கி கம்பீரமாக வலம் வந்தவர்கள் முதுமையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு மூலையில் முடங்கிக் கிடக்கும் அவலம் இன்று பல இடங்களில் நடக்கிறது. அதே நிலை தான் ஒரு காலத்தில் ஊருக்கே குடிநீர் வினியோகித்த கிணறுகளுக்கும் உள்ளது. ஊற்று நீரும் ஆற்று நீரும் மட்டுமல்லாமல் மழை நீரும் கிணற்று நீரும் குடிநீராக பயன்படுத்தப்பட்ட காலம் மலையேறி விட்டது. ஊருக்கு மத்தியில் உள்ள பொதுக் கிணறு என்பது வெறும் தண்ணீர் எடுக்கும் இடமாக மட்டுமல்லாமல் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் இடமாகவும், உறவுகளை பலப்படுத்தும் இடமாகவும், உடலை வலுப்படுத்தும் இடமாகவும் இருந்துள்ளது. காலமாற்றத்தாலும் விஞ்ஞான வளர்ச்சியாலும் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு என்ற நிலை வந்துள்ளது. அத்தகைய வளர்ச்சியே கிணறுகளின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.இதனால் பெரும்பாலான கிராமங்களில் பொதுக்கிணறுகள் கைவிடப்பட்ட நிலையில் குப்பைக் கழிவுகள் சேர்ந்து நோய் பரப்பும் இடமாக மாறியுள்ளது.

ராஜவாய்க்கால்

அந்தவகையில் மடத்துக்குளம் பெரிய வட்டாரம் பகுதியில், ராஜாவாய்க்காலுக்கு அருகில் உள்ள கிணறு கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. அந்த கிணற்றுக்குள் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தற்போது குப்பைகளால் கிணறு முழுவதுமாக மூடப்பட்டு காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் குப்பைக் கழிவுகளுடன் மழைநீர் சேர்ந்து நிலத்தடி நீராதாரம் பாழாகும் அபாயம் உள்ளது. மேலும் கிணற்றில் மட்டுமல்லாமல் கிணற்றைச் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த கிணற்றுக்கு அருகிலுள்ள ராஜவாய்க்கால் பாசன நீரும் பாழாகி வருகிறது.எனவே இந்த கிணற்றிலுள்ள குப்பைகளை அகற்றி, தூர் வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இல்லாவிட்டால் முறையாக கிணற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-


Next Story