சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் முழுஉருவச்சிலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்


சுதந்திர போராட்ட வீரர்  வெள்ளையத்தேவன் முழுஉருவச்சிலை  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
x

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு முழு உருவச்சிலையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு முழு உருவச்சிலையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் நினைவு மணிமண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வெள்ளையத்தேவனின் மார்பளவு வெண்கலச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைக்கு வருடந்தோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வல்லநாடு பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வெள்ளையத்தேவனின் வாரிசுகளும் வெள்ளையத்தேவனின் முழு திருவுருவச்சிலையை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

முழு உருவச்சிலை

இந்த நிலையில் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பெரிய மீசையுடன், வாளுடன் குதிரை மீது அமர்ந்து வரும்படியான சிலை ரூ.39.75 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணி சென்னையில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் இந்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில் முழு உருவச்சிலை வல்லநாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 253- வது ஆண்டு பிறந்தநாள் விழா, வல்லநாட்டில் உள்ள மணிமண்டபத்தில் அவரது முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா மற்றும் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சப்-கலெக்டர் சிவசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், கருங்குளம் யூனியன் தலைவர் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கியம்லீலா மற்றும் சுதந்திர போராட்ட வீரர் வாரிசுதாரர்கள் குடும்பமாக கலந்து கொண்டனர்.


Next Story