தூங்கிய விவசாயி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொன்ற மனைவி
கள்ளிமந்தையம் அருகே தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் தூங்கி கொண்டிருந்த விவசாயி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பூரி கேட்டு தகராறு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள குப்பாயிவலசு கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 63). விவசாயி. இவரது மனைவி பொன்னாத்தாள் (55). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து தினமும் மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 27-ந்தேதி நள்ளிரவு செல்லமுத்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் பொன்னாத்தாளிடம் பூரி போட்டு தருமாறு கேட்டார். அதற்கு அவர் நள்ளிரவில் பூரி போட்டு தர முடியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த செல்லமுத்து அவரை தாக்கிவிட்டு தூங்க சென்றுவிட்டார்.
எண்ணெயை காய்ச்சி ஊற்றி...
இதை நினைத்து அழுது கொண்டே இருந்த பொன்னாத்தாள், தினமும் தகராறு செய்து வரும் தனது கணவரை கொல்ல முடிவு செய்தார். இதனால் வீட்டில் இருந்த தேங்காய் எண்ணெயை எடுத்தார். பின்னர் அந்த எண்ணெயை சூடாக காய்ச்சி செல்லமுத்து தூங்கி கொண்டிருந்த அறைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்.
தனது மனதை கல்லாக்கி கொண்ட பொன்னாத்தாள் தூங்கி கொண்டிருந்த செல்லமுத்து மீது கொதிக்க, கொதிக்க இருந்த எண்ணெயை ஊற்றினார். இதில் அவர் வலியால் அய்யோ, அம்மா என்று அலறினார். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் பொன்னாத்தாளிடம் கேட்டபோது அடுப்பில் இருந்த எண்ணெய் கொட்டியதாக கூறினார்.
விவசாயி சாவு
இதையடுத்து அவர்கள் செல்லமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்லமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே செல்லமுத்து போலீசிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் தனது மனைவிதான் எண்ணெயை காய்ச்சி தன் மீது ஊற்றி கொன்றதாக கூறினார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து பொன்னாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
வாக்குமூலம்
அதில், செல்லமுத்து தினமும் குடித்து விட்டு வந்து போதையில் என்னிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று நள்ளிரவும் அவர் குடித்துவிட்டு வந்து என்னிடம் தகராறு செய்தாா். மேலும் பூரி போட்டு தருமாறு கேட்டு என்னை தாக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த நான், அவர் தூங்கி கொண்டிருந்தபோது கொதிக்க கொதிக்க எண்ணெயை ஊற்றி கொலை செய்தேன் என்று கூறியிருந்தார். மதுபோதையில் தகராறு செய்ததால் கொதிக்கும் எண்ணெயை விவசாயி மீது ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.