வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும்-பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
பேட்டி
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தென்காசி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பழைய குற்றாலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பிஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஒரு பக்கம் வலியுறுத்துகிறார். மறுபக்கம் மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. எனவே இது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக அரசு தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
காட்டுப்பன்றிகள்
யானை, மிளா, காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் தொடர்ந்து விளைநிலப்பகுதிகளை சேதப்படுத்தி வருகிறது. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் காட்டுப்பன்றிகளுக்கு வனவிலங்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவை பயிர்களை நாசப்படுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. அதனை பின்பற்றி தமிழ்நாட்டிலும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். சிவகிரி செண்பகாதேவி அணை திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இரட்டைக்குளம் கண்மாய் பாசன திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.
நெல் கொள்முதல் செய்வதில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நெல் குவிண்டால் ஒன்றுக்கு விலை ரூ.2,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500-ம் என்று தனது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தி.மு.க. அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாகிகள் தேர்வு
கூட்டத்தில் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக கடையநல்லூர் மாடசாமி, செயலாளராக மகாலிங்கம், பொருளாளராக எஸ்.எம்.வி.துரை, துணை தலைவராக புளியரை விஜய், துணை செயலாளராக வடகரை ராமர், தென்காசி ஒன்றிய தலைவராக கோமு தேவர் ஆகியோரை மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில தலைவர் எல்.பழனியப்பன், நெல்லை மண்டல தலைவர் புளியரை செல்லத்துரை, மாநில துணை செயலாளர் எம். செந்தில்குமார், மதுரை மாவட்ட செயலாளர் மேலூர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






