அரிக்கொம்பன் காட்டு யானை மீண்டும் அட்டகாசம்
கேரள வனத்துறை கண்காணிப்பு மையத்தை சேதப்படுத்தி அரிக்கொம்பன் காட்டு யானை மீண்டும் அட்டகாசம் செய்தது.
கேரள மாநிலம் மூணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானை கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரள வனத்துறை மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை தமிழக-கேரள எல்லையான பெரியாறு வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது அங்கிருந்து அந்த காட்டு யானை மேகமலை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது. மேலும் மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிளுக்குள் புகுந்து அரிக்கொம்பன் காட்டு யானை அட்டகாசம் செய்தது. வீடுகளை சேதப்படுத்தியதுடன், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று தீர்த்தது. தொடர்ந்து அந்த யானை மேகமலை வனப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மேகமலையை அடுத்த அப்பர் மணலாறு பகுதியில் அரிக்கொம்பன் காட்டு யானை சுற்றித்திரிந்தது. அப்போது அங்குள்ள கேரள வனத்துறைக்கு சொந்தமான வனவிலங்கு கண்காணிப்பு மையத்தில், சமையலறையை சேதப்படுத்தி மீண்டும் அட்டகாசம் செய்தது. மேலும் சமையலறையில் வைத்திருந்த 25 கிலோ அரிசி மற்றும் உப்பு ஆகியவற்றை அந்த யானை தின்றது. இதனை பார்த்த கேரள வனத்துறையினர் சத்தம் போட்டனர். இதனால் அந்த காட்டு யானை அங்கிருந்து மணலாறு பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.