தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்


தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 10 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 6:46 PM GMT)

கடையநல்லூர் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாற்றுக்கு செல்லும் பகுதியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. அதில் வாழை, தென்னை, நெல் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. நேற்று முன்தினம் இரவில் கடையநல்லூர் பீட் கல்லாறு பகுதியில் லியாகத் அலி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் சோலார் மின்வேலி கம்பங்களை காட்டு யானைகள் சாய்த்தன.

பின்னர் அந்த தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த ஏராளமான வாழை, தென்னை மரங்களை சாய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை, தென்னை மரங்கள் சேதமடைந்தன. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், காட்டு யானைகளால் சேதமடைந்த வாழை, தென்னைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாதவாறு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


Next Story