உடலில் தீக்காயமடைந்த பெண் சாவு


உடலில் தீக்காயமடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் தீ விபத்தில் உடலில் தீக்காயமடைந்த பெண் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர்

கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் செல்லாங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி தமிழரசி(வயது 30). தமிழரசியின் தங்கை தனலட்சுமி(24) கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சிதம்பரத்தை சேர்ந்த சற்குரு (32) என்பவரை தனலட்சுமி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு லக்ஷன் என்ற 8 மாத ஆண் குழந்தை இருந்தது.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கடந்த 8-ந்தேதி மதியம் தனலட்சுமி தனது குழந்தை லக்ஷன், தாய் செல்வி ஆகியோருடன் தமிழரசியின் வீட்டுக்கு சென்றார்.

தீயில் கருகி பலி

வீட்டில் தமிழரசி, தனது 4 மாத கைக்குழந்தை ஹாசினியுடன் இருந்தார். அப்போது பெட்ரோல் கேனுடன் அங்கு வந்த சற்குரு வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, தன்மீது பெட்ரோலை ஊற்றினார். இந்த பெட்ரோல் அங்கிருந்தவர்கள் மீதும் விழுந்தது. அந்த நேரத்தில் விறகு அடுப்பில் இருந்த தீ, திடீரென அனைவரது மீதும் பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.இதில் தமிழரசி, ஹாசினி, லக்ஷன் ஆகியோர் உடல் கருகி பலியானார்கள். மேலும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சற்குரு, தனலட்சுமி, ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

பலி எண்ணிக்கை உயர்வு

மேலும் உடல் முழுவதும் தீக்காயமடைந்த செல்வி(50), புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 6 மணி அளவில் செல்வி பரிதாபமாக இறந்தார்.

இதனால் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story