கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்
கோவையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை
கோவையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்தி குமார் கலந்துகொண்டு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்று கொண்டார்.
கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க பல்லடத்தை சேர்ந்த தனச்செல்வன், அவரது மனைவி பியூலா ஆகியோர் வந்தனர். அப்போது பியூலா, கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்ட போலீசார், அவரை தடுத்தி நிறுத்தி காப்பாற்றினர். தொடர்ந்து கணவன்-மனைவி, கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எம்.பி.பி.எஸ். சீட் மோசடி
தனச்செல்வன், சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். கடந்த 4 ஆண்டுகளாக குடும்பத்துடன் பல்லடத்தில் வசித்து வருகிறார். அவரது மகனுக்கு, கோவை ராமநாதபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்த பிர்தோஷ் சலாஹூதீன் என்பவர் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி வருவதாக கூறினார்.
தொடர்ந்து அவரிடம், ரூ.23 லட்சத்து 50 ஆயிரத்தை தனச்செல்வன் வழங்கினார். ஆனால் அவரது மகனுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நடைபாதை கடைகள்
சுந்தர வீதி சி.டி.டி. காலனி மக்கள் அளித்த மனுவில், எங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வீட்டு மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. 15 மாதங்களில் கட்டி முடித்து பயனாளிகளுக்கு ஒப்படைப்போம் என்று உறுதி அளித்தனர். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் பணி முடியவில்லை. எனவே கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
நடைபாதை வியாபாரிகள் அளித்த மனுவில், சீனிவாசபுரம் மார்க்கெட் நடைபாதை ஓரத்தில் 20 கடைகளுக்கு மேல் செயல்பட்டு வந்தது. யாருக்கும் இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வந்தோம். தற்போது கமர்சியல் கோர்ட்டு வளாகம் வந்ததால், கடைகளை அகற்றி விட்டார்கள். எனவே மீண்டும் கடைகளை அமைத்து தர மறுபரிசீலனை செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. உப்பிலிபாளையம் மஜாரா கள்ளிமடையில் வசிக்கும் வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்கள் 18 பேர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டும், பட்டா வழங்கிய நபர்களுக்கு இடத்தை அளந்து கொடுக்கக்கோரியும் மனு அளித்தனர்.