நடிகர் வடிவேலு சினிமா பட பாணியில் 'பெட்டிக்கடையை காணோம்' என கூறி பரபரப்பை ஏற்படுத்திய பெண் போலீஸ் விசாரணை


நடிகர் வடிவேலு சினிமா பட பாணியில் பெட்டிக்கடையை காணோம் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய பெண் போலீஸ் விசாரணை
x

நடிகர் வடிவேலு சினிமா பட பாணியில் ‘பெட்டிக்கடையை காணோம்' என ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் குமரியில் பரபரப்பாக பேசப்பட்டது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நடிகர் வடிவேலு சினிமா பட பாணியில் 'பெட்டிக்கடையை காணோம்' என ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் குமரியில் பரபரப்பாக பேசப்பட்டது.

பெட்டிக்கடையை காணோம்

நடிகர் வடிவேலு ஒரு சினிமா படத்தில் 'கிணற்றை' காணோம் என போலீசில் புகார் கொடுக்கும் காட்சி ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த காட்சியை போல், சிறு வித்தியாசமாக கிணற்றுக்கு பதிலாக 'பெட்டிக் கடையை காணோம்' என போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் கொடுத்த புகார் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்பு பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 55). இவர் அதே பகுதியில் இரும்பாலான பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

அலேக்காக தூக்கிச் சென்ற திருடர்கள்

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது பெட்டிக்கடையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேறு இடத்துக்கு தான் வந்து விட்டோமோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சற்று நேரம் யோசித்த பிறகு, நம்முடைய கடை இருந்த இடத்தில் தான் நிற்கிறோம் என முடிவு செய்துள்ளார்.

பின்னர் பதற்றத்துடன் நேரடியாக கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அதில், பெட்டிக்கடையை அலேக்காக திருடர்கள் தூக்கி சென்று விட்டனர். அதில் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் இருந்தது என தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணை

பெட்டிக்கடையை உடைத்து பணம் திருடுவதை கேள்விபட்டிருக்கிறோம், ஆனால் பெட்டிக்கடையையே அலேக்காக திருடர்கள் தூக்கி சென்றுள்ளார்களா?, என்னம்மா நீ சொல்றது உண்மை தானா?. நடிகர் வடிவேலு சினிமா பட பாணியில் எங்களை கலாய்க்கலேயே என போலீசார் முதலில் பெண்ணிடம் கூறியுள்ளனர். பின்னர் அந்த பெண் உண்மை தான் என கூறிய பிறகு தான் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சி பதிவாகி உள்ளதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story