கணவரை இழந்த பெண் மர்ம சாவு


கணவரை இழந்த பெண் மர்ம சாவு
x
தினத்தந்தி 11 July 2023 1:00 AM IST (Updated: 11 July 2023 4:03 PM IST)
t-max-icont-min-icon
சேலம்

எடப்பாடி:-

கொங்கணாபுரம் அருகே கணவரை இழந்த பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவரை இழந்த பெண்

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம்பட்டியை அடுத்த தொப்பகாடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மீனாவின் கணவர் வேலுசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில், மீனா தனது குழந்தைகளுடன் கச்சுப்பள்ளி கிராமம், எட்டிகுட்டைமேடு பகுதியில் வசித்து வந்தார். தாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வந்த மீனா, சமீபத்தில் கச்சுப்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார்.

மகனை படிப்பிற்காக தாரமங்கலத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்த மீனா, தனது மகளுடன் எட்டிக்குட்டை மேடு பகுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

தூக்கில் பிணம்

இந்நிலையில் நேற்று அதிகாலை மீனா அவர் குடியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பெண் குழந்தையுடன் தனியாக வீட்டில் வசித்து வந்த மீனா தூக்கில் பிணமாக தொங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், அவர் இறப்பு குறித்து மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையா? போலீசார் விசாரணை

மீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்ற உண்மை தெரிய வரும் என போலீசார் கூறினர். கணவரை இழந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண், மர்மமான முறையில் இறந்த சம்பவம் கோரணம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story