உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வந்த பெண்


உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வந்த பெண்
x

உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

மண்எண்ணெய் ஊற்றி வந்த பெண்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. காலை 10.20 மணி அளவில் மனு கொடுக்க வந்த ஒரு பெண், குறை தீர்க்கும் அரங்கத்தின் பின்புறம் திடீரென தரையில் தனியாக உட்கார்ந்து இருந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவல்லி மற்றும் போலீசார் கவனித்து, அருகில் சென்று விசாரித்தபோது அவருடைய உடலில் இருந்து மண்எண்ணெய் வாசனை வந்தது.

உடனே அந்த பெண் மீது தண்ணீைர ஊற்றிவிட்டு, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், முசிறி பைத்தாம்பாறை செட்டியார் தெரு பகுதியை சேர்ந்த தங்கராஜின் மனைவி கீதா (வயது 48) என்பது தெரியவந்தது. மேலும் அவரது வீட்டின் அருகே உள்ள இடம் தொடர்பாக, எதிர் வீட்டுக்காரர் பிரச்சினை செய்து வருவதாகவும், கீதாவின் இடத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை இடிக்குமாறு அந்த நபர் வற்புறுத்தி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனு கொடுக்க வந்ததாகவும் கூறினார்.

போலீசார் விசாரணை

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வருபவர்களையும், அவர்களின் உடைமைகளையும் போலீசார் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது, மண்எண்ணெய் பாட்டிலை எப்படி கொண்டு வந்தீர்கள் என்று போலீசார் கீதாவிடம் கேட்டனர்.

அதற்கு, மிகச்சிறிய குளிர்பான பாட்டிலில் மண்எண்ணெயை ஊற்றி, ஜாக்கெட்டுக்குள் வைத்து எடுத்து வந்ததாகவும், அதை கலெக்டர் அலுவலகத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து உடலில் ஊற்றிவிட்டு தீக்குளிக்க வந்ததாகவும் கீதா கூறினார். இதைத்தொடர்ந்து கீதாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி திருச்சி செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவல்லி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story