வரன் பார்க்க வந்தவர்களிடம் தவறாக கூறிய பெண் சரமாரி வெட்டிக்கொலை
வரன் பார்க்க வந்தவர்களிடம் தன்னைப்பற்றி தவறாக கூறி திருமணத்துக்கு தடை ஏற்படுத்திய பெண்ணை வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
தேனி,
தேனி மாவட்டம் காந்திபுரத்தை சேர்ந்த பெருமாள் மனைவி சமுத்திரம் (வயது 48). இவர்களுக்கு பூங்கோதை என்ற மகள் உள்ளார். அவர் திருமணமாகி அதே கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். பெருமாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சமுத்திரம் தனியாக வசித்து வந்தாா். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சமுத்திரம் வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சமுத்திரம் அவரது வீட்டு வாசலில் உடலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வாலிபா் கைது
கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சொக்கர் (35) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சமுத்திரத்தை வெட்டி கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அந்த வாக்குமூலத்தில், எனக்கு 35 வயதாகிறது. எனக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இதில் தன்னை வரன் பார்க்க வந்த பெண் வீட்டார்களிடம் தன்னை பற்றி சமுத்திரம் தவறாக பேசியதால் தொடர்ந்து திருமணம் தடைபட்டு வந்தது. மேலும் சமுத்திரத்தின் வீட்டு வழியாக செல்லும்போது அவர் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி வந்தார்.
வெட்டிக்கொன்றேன்
இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் முன்பு சமுத்திரம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நான் அரிவாளை எடுத்துக்கொண்டு அங்கு சென்றேன். இதையடுத்து தூங்கி கொண்டிருந்த சமுத்திரத்தின் முகம், கழுத்து பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான சொக்கர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 12 வருடம் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.