பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்


பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்ணை காவலாளிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்ணை காவலாளிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பிரசவ வார்டு

கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பிரசவ வார்டு உள்ளது. இங்கு பிரசவத்திற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கோவை யை அடுத்த அன்னூரை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று மதியம் அந்த ஆண் குழந்தையை தொட்டிலில் வைத்து விட்டு அந்த பெண் வெளியே சென்றார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென்று அந்த பச்சிளம் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே செல்ல முயன்றார்.

குழந்தையை தூக்கி சென்றார்

இதை பார்த்து சந்தேகம் அடைந்த காவலாளிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களிடம் அந்த பெண், டாக்டர் குழந்தையை தூக்கி வர சொன்னதாக கூற விட்டு சென்றார்.

இதனிடையே வெளியே சென்ற குழந்தையின் தாய் திரும்பி வந்தார். அவர், தொட்டிலில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். மேலும் அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் தனது குழந்தையை காணவில்லை என்று கூறினார்.

இதை அறிந்த காவலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் விரைந்து செயல்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற பெண்ணை மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

விசாரணை

போலீஸ் நடத்திய விசாரணையில், அந்த பெண், கோவை உடை யாம்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கியமேரி (வயது 32) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் பொள்ளாச்சியில் பச்சிளம் குழந்தையை கடத்திய கேரள பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை திருட நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story