பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
சேலம்

எடப்பாடி:-

எடப்பாடியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்கள் தீக்குளிக்க முயற்சி

எடப்பாடி நகராட்சி 24-வது வார்டுக்குட்பட்ட ஆலச்சம்பாளையம் வடக்கு தெருவில் சிலர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நேற்று நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு சென்றனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதில் சித்ரா (வயது 37), பத்மா (23), அமுதா (33), பெருமாயி (57) ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீரென தங்கள் உடல் மீது மண்எண்ணெயை ஊற்றினர். பின்னர் அவர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி ஆவேசமாக ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நகராட்சி ஊழியர்கள் எந்த வகையிலும் அரசு நிலத்தை, தனியார் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று கூறினர்.

மேலும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் அந்த பகுதியில் அரசு நிலத்தில் இருந்த வீடுகள் உள்ளிட்டவை பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடித்து அகற்றப்பட்டன.


Next Story