விபத்தில் இறந்த பெண்கள் 100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்கள்
நாட்டறம்பள்ளி அருகே நடந்த கோர விபத்தில் இறந்த 7 பெண்களில் 6 பேர் 100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்கள் .
இவர்களை பற்றிய உருக்கமான தகவல்கள் வருமாறு:-
ஆன்மிக சுற்றுலா
இந்த விபத்தில் இறந்த தேவகியின் கணவர் சண்முகம் மர வியாபாரம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி பொது மக்களை ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி அவர் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதிக்கு ஆன்மிக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து பேரணாம்பட்டு அருகே உள்ள ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் செல்வி, சாவித்திரி, தெய்வானை, கலாவதி, மீரா, தேவகி ஆகிய 6 பேரும் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மசிகம் ஊராட்சியில் 100 நாள் வேலை செய்து வந்துள்ளனர்.
கணவர்-குழந்தைகள் கண் முன்னே...
இவர்களில் செல்விக்கு 1 மகன், 2 மகள்களும், சாவித்திரிக்கு ஒரு மகன், ஒரு மகளும், தெய்வானைக்கு ஒரு மகள், ஒரு மகனும், கலாவதிக்கு 2 மகன்களும், மீராவிற்கு 2 மகன்கள், ஒரு மகளும், தேவகிக்கு 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.
தேவகி தனது கணவர் சண்முகத்துடன் சுற்றுலா சென்று கணவர் கண் முன்னே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகம் காயத்துடன் உயிர் தப்பினார்.
பேரணாம்பட்டை சேர்ந்த கீதாஞ்சலி என்பவர் தனது கணவர் ரஞ்சித், மகன் முகேஷ் (வயது 13), மகள் சைலஜா (11) ஆகியோருடன் ஒரே வேனில் பயணம் செய்தவர். இவர் விபத்தில் கணவர் மற்றும் குழந்தைகள் கண் முன்னே உயிரிழந்தார். ரஞ்சித் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
உயிர் தப்பிய பெண் பேட்டி
இந்த விபத்தில் உயிர் தப்பிய ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த சாந்தி (60) என்பவர் கூறியதாவது:-
கடந்த 8-ந் தேதி ஆன்மிக சுற்றுலா சென்று விட்டு ஊருக்கு திரும்பினோம். நாட்டறம்பள்ளி அருகே வந்தபோது நாங்கள் பயணம் செய்த வேன் திடீரென பஞ்சர் ஆனது. உடனே வேன் டிரைவர் எங்களை வேனிலிருந்து கீழே இறங்குங்கள், டயர் மாற்ற வேண்டும் என்று சொன்னார். இதனால் வேனிலிருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் கீழே இறங்கி ரோட்டின் சென்டர் மீடியன் பகுதியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
பின்னர் நான் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்கிருந்து எழுந்து சென்றேன். என்னுடன் மேலும் 2 பேர் வந்தனர். இயற்கை உபாதை கழித்து விட்டு திரும்பி வந்தோம். வேனுக்கு அருகே சுமார் ஒரு அடி தூரத்தில் வந்தபோது, வேகமாக வந்த மினி லாரி, பஞ்சராகி நின்று கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் நான் மற்றும் சரஸ்வதி, லதா ஆகிய 3 பேரும் மயிரிழையில் உயிர் தப்பினோம். கடவுள் அருளால் பிழைத்த எனக்கு 8 பேரன், பேத்திகளை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. என்னுடன் பயணம் செய்தவர்களை பறிகொடுத்து விட்டேன் என கண்ணீருடன் கதறி அழுதார்.