அய்யங்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கின


அய்யங்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கின
x
தினத்தந்தி 25 Jun 2023 4:55 PM IST (Updated: 25 Jun 2023 6:32 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அய்யங்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அய்யங்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது திருவண்ணாமலை நகராட்சி அய்யங்குளம் தெருவில் உள்ள அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த குளத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 3 நாள் தெப்பல் உற்சவம் நடைபெறும். இக்குளத்தின் 4 திசைகளிலும் நுழைவு வாயில் அமைந்துள்ளது.

குளத்தில் சுற்றுச்சுவரை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இவற்றை அகற்றி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பினர் மூலம் குளம் தூர்வாரப்பட்டு, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது தூர்வாரும் பணிக்காக குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், திருவண்ணாமலை நகராட்சி அய்யங்குளம் தெருவில் உள்ள அய்யங்குளம், சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தின் சுற்றுச்சுவரை சுற்றி உள்ள செடிகளை அகற்ற வேண்டும். குளத்தை சுற்றி பதிக்கப்பட்டுள்ள படிக்கற்களை சரி செய்ய வேண்டும்.

குளத்தில் கருங்கற்களினாலான படிகற்களை சுற்றி பாதுகாப்பான முறையில் உறுதியான முறையில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். அதுமட்டுமில்மால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவற்கு ஏதுவாக குளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்பு கம்பிகளை அமைத்திட வேண்டும்.

அதிநவீன எந்திரம்

நான்குபுறமும் உள்ள நுழைவு வாயிலிலும் ஒளிவிளக்கு, குளம் நடுவில் நந்தி சிலை அமைக்க வேண்டும் என்று அலுவலர்களும், தூய்மை அருணை நிர்வாகிகளுக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.

இக்குளத்தை சுற்றி தூய்மை அருணை சார்பில் தூர்வாரும் பணிகள் மற்றும் சீர்மைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிநவீன எந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றியும் வடிய செய்தும் குளத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கசடு மண்களை அகற்றும் பணியினை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள மடத்தையும், குளத்தை சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தபோது கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், உதவி கோட்டப் பொறியாளர் ராஜ்குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்தரம், திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் முகிலன், தூய்மை அருணை நிர்வாகிகள் இரா.ஸ்ரீதரன், கார்த்திவேல்மாறன், பிரியா விஜயரங்கன், துரை வெங்கட் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



Next Story