அய்யங்குளம் தூர்வாருவதற்காக தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரம்
திருவண்ணாமலை அய்யங்குளம் தூர்வாருவதற்காக தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது நகரில் அமைந்துள்ள அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்படி இந்த குளத்தில் சுமார் 5 முறை தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் முக்கிய அமாவாசை நாட்களில் இந்த குளக்கரையில் ஏராளமான மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இதில் கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த பின்னர் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடைபெறும்.
இவ்வாறு மிகவும் பிரசித்தி பெற்ற இந்த குளம் சேறும், சகதியுமாக உள்ளதாகவும், அதனை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
சமீபத்தில் இக்குளத்தில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு இக்குளம் தூர்வாரப்பட்டு படிக்கட்டுகள் செப்பனிப்படும் என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அய்யங்குளம் தூர்வாரும் பணிக்காக குளத்தில் உள்ள தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குளத்தில் 3 இடங்களில் பெரிய மோட்டார்கள் வைத்து குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு கழிவுநீர் கால்வாயில் விடப்படுகிறது.
குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வீணாக கால்வாயில் விடாமல் தண்ணீரை உபயோகமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.