கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் விபத்துகளை தடுக்க மஞ்சள் நிற கோடு வரையும் பணி தீவிரம்

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் விபத்துகளை தடுக்க மஞ்சள் நிற கோடு வரையும் பணி தீவிரமாக நடைபெற்றது.
கிணத்துக்கடவு
கோவை -பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து தொடங்கியது. அப்போது சாலையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வசதியாக ரோட்டின் நடுவே மஞ்சள் நிறக் கோடுகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சாலை அமைக்கப்பட்டு இதில் போக்குவரத்து தொடங்கியும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பெரும்பாலான இடங்களில் மஞ்சள் நிற கோடுகள் அழிந்துவிட்டன. இதனால் நான்கு வழி சாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்ல தொடங்கின. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் அடிக்கடி விபத்து நடைபெற்றது. இதையடுத்து இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது கோவை ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி இடையே 4 வழி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற கோடுகள் அழிந்திருந்ததால் தற்போது மஞ்சள் நிற கோடுகள் வரைந்து புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் மஞ்சள் நிற கோடுகள் வரையும் பணி நடைபெற்றது. இந்த பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.