பெருமாள் ஏரியை தூர்வாரும் பணி மந்தம்


பெருமாள் ஏரியை தூர்வாரும் பணி மந்தம்
x
தினத்தந்தி 16 July 2023 6:45 PM GMT (Updated: 16 July 2023 6:46 PM GMT)

பெருமாள் ஏரியை தூர்வாரும் பணி மந்தமாக நடைபெறுவதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அன்சூல் மிஸ்ராவிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்

கடலூர்

குறிஞ்சிப்பாடி

தூர்வாரும் பணி

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள 16 கிலோ மீட்டர் நீளம், ஒரு கிலோ மீட்டர் அகலம் உள்ள பெருமாள் ஏரியை தூர்வாரும் பணி ரூ.112 கோடியில் நடைபெற்று வருகிறது. இதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா நேற்று அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பெருமாள் ஏரி நீர் பாசன விவசாயிகள், பெருமாள் ஏரியை தூர்வாரும் பணி கடந்த சில மாதங்களாக மிகவும் மந்தமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் போது மணல் அதிக அளவில் வெட்டி எடுக்கப்பட்டது. ஏற்கனவே தூர்வாரும் பணியால் 3 போகம் சாகுபடி செய்யாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். ஏரியில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இன்னும் மண் வெட்டப்படாமல் உள்ளது. எனவே பணியை துரிதப்படுத்தி விரைவில் முடித்தால் இந்த ஆண்டாவது விவசாயிகள் சாகுபடி செய்ய வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்தனர்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பணியை துரிதப்படுத்தி, விரைவாக முடிக்க உத்தரவிட்ட அவர் தொடர்ந்து ரூ.50 கோடியில் கீழ் பரவனாறு தூர் வாரும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், கூடுதல் கலெக்டர் மதுபாலன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், ஞானசேகரன், உதவி பொறியாளர்கள் கவுதமன், வெற்றிவேல், செந்தில்குமார், குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞான சுந்தரம், ராமச்சந்திரன் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.


Next Story