பாக்கு காய்களை உலர வைக்கும் பணி மும்முரம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அறுவடை செய்த பாக்கு காய்களை உலர வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. உலர வைத்த பாக்குகளை கிலோ ரூ.200-க்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அறுவடை செய்த பாக்கு காய்களை உலர வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. உலர வைத்த பாக்குகளை கிலோ ரூ.200-க்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
பாக்கு அறுவடை
ஆனைமலை ஒன்றியம் முழுவதும் 23 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தென்னை மரங்களுக்கு இடையில் பல விவசாயிகள் ஊடுபயிராக பாக்கு மரங்களை பயிரிடுகின்றனர்.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பாக்கு சீசன் ஆகும். அதன்படி ஆனைமலை பகுதியில் தற்போது மங்களா, மொகித், குட்டமங்களா உள்ளிட்ட பாக்கு வகைகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. அவற்றை அறுவடை செய்து, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உலர்த்தும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
7 உலர் களங்கள்
முன்னதாக பச்சை காய்களை 45 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கும், பாக்குப்பழங்களை 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறார்கள். அவற்றை உலர வைத்து கொடுத்தால், கூடுதல் விலை கிடைக்கிறது. இதனால் உலர வைக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பாக்கு காய்களை உலர்த்தி காய வைத்து கொடுத்தால் ஒரு கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை கிடைக்கும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள 7 உலர் களங்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாக்கு காய்களை உலர வைக்கும் பணியில் முனைப்பு காட்டி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மூட்டைக்கு 10 பைசா
விற்பனை கூட அதிகாரி கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி அடிக்கடி மழை பெய்து வருவதால், முன்கூட்டியே விற்பனை கூட வளாகத்தில் பாக்கு காய்களை உலர வைப்பதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளார்கள். தற்போது விலை குறையும் சமயத்தில் விற்பனை கூடத்தில் நாளொன்றுக்கு ஒரு மூட்டைக்கு 10 பைசா செலுத்தி இருப்பு வைத்து விவசாயிகள் பயனடையலாம். மேலும் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது என்றார்.