மழையில் நனைந்த நெல்மணிகளை காயவைக்கும் பணி மும்முரம்


மழையில் நனைந்த நெல்மணிகளை காயவைக்கும் பணி மும்முரம்
x

மழையில் நனைந்த நெல்மணிகளை காயவைக்கும் பணி மும்முரம்

நாகப்பட்டினம்

நாகை அருகே மழையில் நனைந்த நெல்மணிகளை காயவைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. எனவே 22 சதவீத ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையில் நனைந்த நெல்மணிகள்

நாகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை பெய்ததால் நாகை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.

இந்த கனமழை காரணமாக நாகை செல்லூர், பனையூர், சிக்கல், கீழையூர், திருக்குவளை, காரப்பிடாகை, தலைஞாயிறு, வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்ன.

அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பாக தார்ப்பாய்களை கொண்டு விவசாயிகள் மூடி வைத்திருந்தனர். ஆனாலும் பெரும்பாலான இடங்களில் மூடி வைக்கப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

காயவைக்கும் பணி

நேற்று காலை லேசான வெயில் அடித்தது. இதில் நனைந்த நெல்மணிகளை காயவைக்கும் பணியில் நாகை விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை அருகே செல்லூரில் உள்ள தற்காலிக கொள்முதல் நிலையத்தில் மழைநீர் சூழ்ந்தது. அப்போது அங்கு, விவசாயிகள் தார்ப்பாய்களை கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விட்டது. நனைந்த நெல்மணிகளை விவசாயிகள் காயவைத்து வருகின்றனர்.

இதுகுறித்து நாகை கடைமடை விவசாயிகள் கூறுகையி்ல்,

எந்த ஆண்டும் இல்லாத படி நடப்பாண்டு முப்போகம் நெல் சாகுபடி கடைமடை பகுதியில் செய்யப்பட்டுள்ளது. பருவ மழையில் இருந்து தப்பிய நெல்மணிகள், தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. ஒரு சில இடங்களில் அறுவடை தொடங்கி நடந்து வந்தது.

கொள்முதல் செய்ய வேண்டும்

கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து விட்டன. கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்பது போல, நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது வேதனை அளிக்கிறது. இதனால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று (நேற்று) மழை விட்ட போதிலும் பெரும்பாலான வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியவில்லை. இதனால் எந்திரத்தை கொண்டும் அறுவடை செய்ய முடியாது. இந்த நிலை நீடித்தால் பயிர் அனைத்தும் அழுகிவிடும். தண்ணீர் வடிய விட்டு அறுவடை செய்ய குறைந்தது ஒரு வார காலமாகும்.

அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் போடுவதற்காக, விவசாயிகள் மூட்டையில் அடுக்கி வைத்திருந்தனர். இந்த கனமழை காரணமாக அந்த நெல் மூட்டைகளும் நனைந்து விட்டன. இதில் நனைந்த நெல்மணிகளை காய வைத்து குறிப்பிட்ட ஈரப்பதத்தில் கொள்முதல் நிலையங்களில் போட வேண்டும். இதனால் கடும் சிரமத்துடன் நெல்மணிகளை காய வைத்து வருகிறோம்.

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை காலதாமதம் இன்றி கொள்முதல் நிலையங்களில் எடுக்க வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி 22 சதவீதம் ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

வேதாரண்யம்

வேதாரண்யம், ஆதனூர், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், தகட்டூர், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியமால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசு உடனடியாக பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கனமழை காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் நேற்று 5-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.


Next Story