மழைநீர் செல்ல குழாய்கள் அமைக்கும் பணி மும்முரம்


மழைநீர் செல்ல குழாய்கள் அமைக்கும் பணி மும்முரம்
x

வால்பாறை-சோலையாறு அணை சாலையில் மழைநீர் செல்ல குழாய்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை-சோலையாறு அணை சாலையில் மழைநீர் செல்ல குழாய்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

குழாய்கள் அமைக்கும் பணி

வால்பாறை பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமாக 120 கிலோ மீட்டர் தூர சாலைகள் உள்ளது. இந்த சாலைகளில் அகலப்படுத்தும் பணி, தடுப்பு சுவர் கட்டும் பணி, புதிதாக பாலங்கள் அமைக்கும் பணி, அறிவிப்பு பலகைகள் வைக்கும் பணி ஆகியவை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் வழியில் மழைநீர் பாய்ந்தோடி அரிப்பை ஏற்படுத்தி சாலையை பழுதாக்கும் நிலை இருந்தது. இதை தடுக்க ஆங்காங்கே சாலையின் குறுக்கே குழாய்கள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதாவது மலைச்சரிவுகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் நேராக சோலையாறு அணையில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விபத்தில் சிக்கும் அபாயம்

இதற்கிடையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் குழிகள் காணப்படுகிறது. மேலும் சிமெண்டு சாலை அமைக்க வேண்டிய இடங்களில், பணிகள் தொடங்காமல் உள்ளது. இது தவிர மழை மற்றும் பனிக்காலத்தில் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் சாலையில் பதிக்கப்பட்ட ஒளிரும் வில்லைகள் உடைந்து மற்றும் தேய்ந்து போன நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே புதிய வில்லைகளை பதிக்கவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story