விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
சிங்கம்புணரி பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிங்கம்புணரி பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சிலை
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொருத்தவரை மானாமதுரை, சிங்கம்புணரி போன்ற பகுதிகளில் மண்ணால் செய்யப்பட்ட எளிதில் கரையக்கூடிய ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேளார் தெருவில் மண்பானை, பொங்கல் பானை, விறகு அடுப்பு, பொங்கல் வைப்பதற்கான மண் அடுப்பு, கோவில் திருவிழாக்களில் நேர்த்திக்கடனுக்காக புரவிகள் செய்வது, குழந்தை பொம்மைகள் மற்றும் நாக பொம்மைகள் என எண்ணற்ற மண்ணால் செய்யப்படும் பொருட்கள் இந்த பகுதியில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சிலை செய்பவர்கள், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து விநாயகர் சிலை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இயற்கை பொருள்
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் சிங்கம்புணரி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விநாயகர் சிலை தயாரிக்கும் சோமன் என்பவர் கூறுகையில், சிங்கம்புணரி வேளார் தெருவில் 3 தலைமுறைகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ரசாயன கலப்படம் இல்லாத கரம்பை மண்ணில் விநாயகர் சிலைகளை செய்து வருகிறோம். இச்சிலையின் சிறப்புகள் என்னவென்றால் இதன் தயாரிக்கும் முறை இயற்கையான பொருளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
முதலில் கரம்பை மண்ணை 3 நாட்களுக்கு மேல் வெயிலில் நன்கு காயவைத்து கற்கள் இல்லாமல் சலித்து எடுத்துக்கொண்டு அதில் யானை லத்தி, பசு மாட்டு சாணம் மற்றும் நெல் உமி போன்றவற்றை சேர்த்து நன்கு கால்களை பயன்படுத்தி பிசைந்து மண்ணை பக்குவப்படுத்தி அதன் மூலம் விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது.
கரைப்பதற்கு ஏற்றது
விநாயகர் சிலைகளை நிழலில் காயவைத்து ரசாயனம் கலப்படமில்லாத வண்ணங்கள் பூசப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறிய சிலை முதல் பெரிய சிலை வரை கரம்பை மண்ணால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. எங்களிடம் இயற்கையான முறையில் ரசாயன கலப்படம் இல்லாமல் செய்யப்படும் விநாயகர் சிலைகள் பூஜைக்கு பிறகு விநாயக சதுர்த்தி முடிந்தவுடன் குளங்கள் ஏரிகளில் கரைப்பதற்கு ஏற்ற தன்மையுடன் செய்யப்பட்டு வருகிறது என்றார்.