கரூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
கரூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் 1 அடி முதல் 10 அடி வரை சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் மாதம் 18-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தற்போது பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கரூர் திருமாநிலையூரில் இருந்து சுங்ககேட் செல்லும் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 1 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை அழகிய கலைநயத்துடன் தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர்.
வர்ணம் தீட்டும் பணி
இதில் விநாயகர் மயில், பசுமாடு, எலி, பாம்பு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் மீது கம்பீரமாக அமர்ந்திருப்பது போன்று சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜவிநாயகர், சூரியவிநாயகர் உள்ளிட்ட பல்வேறு விதவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளது. வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு வர்ணம் தீட்டும் பணியும், அலங்கார ஒப்பனைகள் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்ட சிலைகள் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் டிசைன் மற்றும் உயரங்களை பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்யப்படும் சிலைகளை கரூர், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, காந்திகிராமம், சுங்ககேட், பசுபதிபாளையம், வெள்ளியணை, மண்மங்கலம் உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு தரப்பினர் வருகைதந்து ஆர்டர் கொடுத்து செல்கின்றனர்.
கேடு விளைவிக்காத...
இதுகுறித்து விநாயகர் சிலைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறும்போது, நாங்கள் 10 ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்து வருகின்றோம். இங்கு 1 அடி முதல் 10 அடி வரை உள்ள விநாயகர் சிலைகள் உள்ளன. சிலைகள் உயரம், டிசைன் போன்றவற்றுக்கு தகுந்தாற்போல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு செய்யப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் தயாரிக்கப்படுகிறது. நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்மாசுபாடு ஏற்படாது. கரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு தரப்பினர் வாங்கி செல்வதற்காக ஆர்டர் கொடுத்துள்ளனர். தற்போது மூலப்பொருட்களின் விலை அதிகரித்து இருப்பதால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு விநாயகர் சிலைகளின் விலைகள் சற்று உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வினை எங்களால் தவிர்க்க முடியவில்லை. கடந்த ஆண்டு விநாயகர் சிலை விற்பனை நன்றாக இருந்தது, இந்தாண்டும் விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.