காரைக்குடி பகுதியில் தென்னங்கிடுகு தயாரிக்கும் பணி மும்முரம்
தற்போது வெப்பம் அதிகமாக காணப்படுவதால் காரைக்குடி சுற்று வட்டார பகுதியில் தென்னை விவசாயிகள் கிடுகு தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காரைக்குடி
தற்போது வெப்பம் அதிகமாக காணப்படுவதால் காரைக்குடி சுற்று வட்டார பகுதியில் தென்னை விவசாயிகள் கிடுகு தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னங்கிடுகு தயாரிப்பு பணி
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடைக்காலமாக இருக்கும். அப்போதைய காலக்கட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் அதிகமாகவே காணப்படுவதால் வீடுகளில் குளிர்ச்சியான இடத்தை அமைக்க பொதுமக்கள் முன்வருவது உண்டு. அதிலும் கோடைக்காலத்தில் வரும் அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் கோடை வெப்பம் அதிகமாகவே இருக்கும்.
இந்தநிலையில் இந்தாண்டு கோடைக்காலம் நிறைவு பெற்ற பின்னரும் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. இதனால் வயதானவர்கள், முதியோர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பகல் நேரங்களில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வெப்ப சூழ்நிலையை பயன்படுத்தி காரைக்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் தென்னங்கிடுகு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு அதை பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
விற்பனைக்காக ஏற்றுமதி
இதுகுறித்து காரைக்குடி அருகே சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:-
சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகோட்டை, பனம்பட்டி, விளாரிக்காடு, பீர்க்கலைக்காடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் தென்னை மரங்களை வைத்து பராமரித்து வருகின்றனர். இந்த தென்னை ஓலைகளில் இருந்து கிடுகு பின்னுதல், தென்னை மட்டைகளில் இருந்து நார் பிரித்தெடுத்தல், தேங்காய் உரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆயிரக்கணக்கான விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தென்னை ஓலைகளில் இருந்து தென்னங்கிடு குகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். 50 எண்ணிக்கை கொண்ட இந்த தென்னங்கிடுகு ரூ.450 வரை விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம். மதுரை, திருச்சி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் தற்போது இயற்கையை விரும்புவதால் இந்த தென்னங்கிடுகிற்கு அதிக அளவு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தென்னங்கிடுகுகளை தயாரித்து விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம். இதுதவிர நாள் ஒன்றுக்கு இந்த தென்னங்கிடுகை தயாரிப்பு பணியில் ஈடுபட்டால் ஆயிரம் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.