சதுர்த்தி விழாவையொட்டிவிநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்
சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இதில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு, அதை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்து 3 அல்லது 5 நாட்களுக்குப் பின் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இன்னும் சதுர்த்தி விழாவுக்கு ஒரு வாரமே இருப்பதால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதற்கான சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரூ.3 ஆயிரம் முதல்...
குறிப்பாக கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்டுரோடு பகுதி, தச்சூர் கைகாட்டி பகுதி ஆகிய இடங்களில் காகிதம், கிழங்குமாவு கூழ் ஆகியவற்றை கொண்டு விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
சிங்கம் வாகனம், ஆஞ்சநேயர், ரிஷபம், மயில், யானை வாகனம், வாத்து, சுண்டெலி ஆகிய வாகனத்தில் அமர்ந்த படி விநாயகர் காட்சி அளிக்கும் வகையிலான சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் 3 முதல் 15 அடி வரை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளுக்கு தற்போது வர்ணம் பூசும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரு சிலைகள் குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.