கடலூரில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்


கடலூரில்       விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்
x

கடலூரில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலூர்

விநாயகர் சதுர்த்தி விழா

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் முதுநகர் மணிவெளி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் 10- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் சிறியது முதல் பெரிய ரக விநாயகர் சிலைகளை தயாரித்து, அவற்றை வெளி மாநிலங்களான மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைத்து வந்தனர். இது தவிர இங்கு தயாராகும் விநாயகர் சிலைகளுக்கு திருச்சி, சேலம், கோவை மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் நல்ல வரவேற்பு உண்டு.

பெரிய சிலை

ஆனால் தற்போது இந்த தொழிலில் போதிய வருமானம் இன்றி சிலர் இந்த தொழிலை விட்டு விட்டனர். அதுவும் கொரோனாவுக்கு பிறகு அவர்கள் விநாயகர் சிலைகள், கிருஷ்ண ஜெயந்திக்கான பொம்மைகள் செய்வதை அடியோடு விட்டு விட்டனர். இருப்பினும் தற்போது 3 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் தற்போது 3 அடி முதல் 10 அடி வரையுள்ள விநாயகர் சிலைகளை தயார் செய்து உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் விநாயகர் சிலைகள் கடலூர் மாவட்டத்திற்குள் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் போன்ற வெளி மாவட்டங்களுக்கும் ஆர்டரின் பேரில் தயாரித்து உள்ளனர்.

வர்ணம் பூசும் பணி

ஆர்டர் இல்லாமலும் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனைக்காக வைத்து உள்ளனர். சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில், வர்ணம் பூசும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரித்து உள்ள விநாயகர் சிலைகள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் விற்பனை அந்த அளவுக்கு இல்லை என்று விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

புதிதாக விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளிக்காமல் இருப்பது, பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது போன்ற காரணங்களால் விநாயகர் சிலை தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நலிவடைந்து விட்டது

இது பற்றி விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சங்கர் கூறுகையில், நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஆனால் இந்த தொழில் கொரோனாவுக்கு பிறகு நலிவடைந்து விட்டது. இப்போது எங்கள் பகுதியில் 3 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் இந்த தொழிலை செய்து வருகிறோம்.

முன்பு ஒரு குடும்பத்தில் 300 முதல் 350 விநாயகர் சிலைகளை செய்வோம். இப்போது 70 சிலைகள் தான் செய்துள்ளோம். அதுவும் சிலர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்யாமலும் சிலை தயாரித்து இருக்கிறோம். ஆனால் அது விற்பனை ஆகுமா? என்று தெரியவில்லை. நாங்கள் கற்பக விநாயகர், ராமர் விநாயகர், பஞ்சமுக விநாயகர், 5 வாகன விநாயகர், நரசிம்ம விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை தயாரித்து உள்ளோம். இருப்பினும் புதிதாக விநாயகர் சிலை வைக்க சிலை அமைப்பாளர்களுக்கு அனுமதி கிடைக்காமல் இருப்பதும் எங்கள் தொழிலுக்கு பாதிப்பு தான் என்றார்.


Next Story