சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரம்


சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரம்
x

சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந் தேதி வருகிறது. அன்றைய தினம் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பா.ஜனதா, இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்கள், வீடுகள் மற்றும் கோவில்களில் ஆயிரக்கணக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

சிலைகள் தயார்

இதற்கிடையே விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 17 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குமரி மாவட்டத்தில் வில்லுக்குறி பகுதியில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி நடக்கிறது. அங்கு அன்ன விநாயகர், தாமரை விநாயகர், மயில் விநாயகர், சிம்ம விநாயகர், ராஜ விநாயகர் மற்றும் கருட விநாயகர் என பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு தயார் செய்யப்பட்ட வித விதமான விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு அடி முதல் 12 அடி வரை உயரம் உள்ள விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

கட்டுப்பாடுகள்

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை இந்த ஆண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும், புதிதாக வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கும், கரைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் புதிதாக சில இடங்களிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதிக்க வேண்டும் இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக வழக்கத்தை விட விமரிசையாக கொண்டாடுவதற்கும் தயாராகி வருகிறார்கள்.


Next Story