மதமாற்றத்தை தடுக்கும் பணியை குடும்பத்தில் தொடங்க வேண்டும்


மதமாற்றத்தை தடுக்கும் பணியை குடும்பத்தில் தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 10 July 2023 12:45 AM IST (Updated: 10 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மத மாற்றத்தை தடுக்கும் பணியை குடும்பங்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறினார்.

கோயம்புத்தூர்

மத மாற்றத்தை தடுக்கும் பணியை குடும்பங்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறினார்.


உலக நலனுக்கான ஹோமம்


கோவை சிங்காநல்லூரில் காமாட்சிபுரி ஆதீனம் உள்ளது. இந்த ஆலய வளாகத்தில் மழை வளம் வேண்டியும், அகால விபத்து, பூகம்பம் உள்ளிட்டவை நிகழாமல் தடுக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வேண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். முன்னதாக அவரை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வரவேற்றார்.


இதில் கலந்து கொண்ட மோகன் பகவத் பேசியதாவது:-


இந்து தர்மம்


ஹோமங்கள் நன்மையை ஏற்படுத்தும். கம்போடியாவில் உள்ள கோவிலுக்கு சென்றபோது எனது தலையை அங்குள்ள கல்லில் மோதி ரத்தம் வர செய்து வழிபட்டேன். மத மாற்றத்தால் இந்தியா மிகவும் கஷ்டப்பட்டு உள்ளது. இந்துக்கள் ஒற்றுமையு டன் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார ரீதியில் இருந்தாலும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது.


உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்து கோவில்கள் உள்ளன. இதன் மூலம் நமது மதத்தின் சாராம்சம் மக்களிடம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் ராஜ ராஜசோழன் கடல் கடந்து சென்று கோவில்களை நிர்மாணம் செய்தான். அதன் மூலம் அங்கெல்லாம் நமது கருத்துகள் பரவி உள்ளது.


மதமாற்றம்


வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்து தர்மத்தின் சிறப்பு. இதில் உண்மை, தூய்மை, அன்பு, தவம் ஆகிய நான்கு கருத்துகள் முக்கியமானது.

அதை மேலும் வளர்க்க வேண்டும். யாரையும் நாம் வெற்றி கொள்ள வேண்டியது இல்லை மாறாக நமது கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்.மதமாற்றம் கூடாது என்பது நம்மிடம் இருந்து தொடங்கப்பட வேண்டும்.

நாம், நமது குடும்பம், உறவினர்கள் மதமாற்றத்தை தடுக்க வேண்டும். குடும்பங்களில் இருந்தே இந்த பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story