மாவட்ட வணிக வளாகத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது


மாவட்ட வணிக வளாகத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது
x

தாந்தோணிமலையில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பயன்படுத்தி வந்த மாவட்ட வணிக வளாககத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.

கரூர்

வணிக வளாகம்

தாந்தோணிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே மாவட்ட வணிக வளாக கட்டிடம் ஒன்று கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் 18 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சுய உதவிக்குழு மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வைத்து பல ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், மாவட்ட வணிக வளாக கட்டிடத்தில் கழிவறை, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாதது மற்றும் பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு கடைகளும் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு, சுய உதவிக்குழுவினர் அனைவரும் வெளியேறினர். இதனால் அந்த கட்டிடம் பயனற்று கிடந்தது. பின்னர் மாவட்ட வணிக வளாகம் மூடப்பட்டது.

சீரமைக்கும் பணி மும்முரம்

இந்நிலையில் பயனற்று கிடந்த கட்டிடத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து மீண்டும் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை வைத்து விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொது நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.

தற்போது மாவட்ட வணிக வளாகத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிக்கப்பட்டு முறையாக மகளிர் சுயஉதவிக்குழு மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்ய வணிக வளாகம் பயன்பாட்டிற்கு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story