ராமேசுவரம் கோவிலை பழமை மாறாமல் புனரமைக்கும் பணி தொடக்கம்


ராமேசுவரம் கோவிலை பழமை மாறாமல் புனரமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 27 Aug 2023 6:45 PM GMT (Updated: 27 Aug 2023 6:45 PM GMT)

ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் ராமேசுவரம் கோவிலை பழமை மாறாமல் புனரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் ராமேசுவரம் கோவிலை பழமை மாறாமல் புனரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராமேசுவரம் கோவில்

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் விளங்கி வருகிறது. சுமார் 1100 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த கோவிலான ராமேசுவரம் கோவிலுக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்திய தொல்லியல் துறை வல்லுனர்கள் ஆலோசனைப்படி கோவிலில் பழமை மாறாமல் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும், கோவிலுக்குள் சூரிய வெளிச்சம் உள்ளே வந்து கோவிலின் அனைத்து சன்னதிகளும் வெளிச்சமாக இருக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து செல்லும் மகாலட்சுமி சன்னதி எதிரே உள்ள மகாலட்சுமி தீர்த்தத்தை சுற்றிய பழைய அறைகள் கொண்ட கட்டிடங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டுள்ளன. அந்த இடத்தை சுற்றி தடுப்பு சுவர்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளானது கோவிலின் இணை ஆணையர் சிவராம்குமார் ஆலோசனையில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது.

பழமை மாறாமல்

இது குறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, இந்திய தொல்லியல் துறை வல்லுநர்கள் ஆலோசனைப்படி ஏற்கனவே கடந்த 1905-ம் ஆண்டு ராமேசுவரம் கோவிலின் அனைத்து சன்னதிகளும் எப்படி இருந்ததோ அதேபோல் சூரிய வெளிச்சம் உள்ளே வரும் வகையிலும் காற்றோட்டமாக இருக்கும் வகையிலும் அனைத்து சன்னதிகளிலும் பழமை மாறாமல் புனரமைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளானது கோவில் நிதியான ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. மகாலட்சுமி சன்னதி, சேதுபதிசுவரர் முருகன், விநாயகர் சன்னதிகள் மற்றும் மூன்றாம் பிரகாரத்தின் உள்பகுதி பிரகாரங்களில் இருந்த பழைய கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளன.

6 மாதத்தில் முடிக்க திட்டம்

மேலும், கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்து விமானத்தையும் பார்த்து அந்த சன்னதியை சுற்றி வரும் வகையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவிலின் அம்மன் சன்னதி மற்றும் சுவாமி சன்னதி மண்டபத்தில் நடுப்பகுதியில் சிவ தீர்த்தத்தை சுற்றியுள்ள சுவர்கள் 4 அடி உயரத்திற்கு இடிக்கப்பட்டு சிவ தீர்த்தம் தெளிவாக பக்தர்கள் பார்க்கும் வகையில் அந்த இடத்திலும் கம்பிகள் அமைக்கப்பட உள்ளன. 6 மாதத்தில் இந்த பணிகள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story