தங்க நகைகளில் கற்களை பிரிக்கும் பணி
மேட்டுப்பாளையம் வனப்பத்ரகாளியம்மன் கோவிலில் தங்க நகைகளில் கற்களை பிரித்தெடுக்கும் பணி ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ தலைமையில் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் வனப்பத்ரகாளியம்மன் கோவிலில் தங்க நகைகளில் கற்களை பிரித்தெடுக்கும் பணி ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ தலைமையில் நடைபெற்றது.
நகைகளில் கற்களை பிரித்தெடுக்கும் பணி
தமிழகம் முழுவதும் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பயன்படுத்தாமல் இருக்கும் தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி பாரத் ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய தமிழக இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதன்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வன பத்ரகாளியம்மன் கோவிலில் 2013-ம் ஆண்டு முதல் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக வழங்கிய 21 கிலோ 785 கிராம் தங்க நகைகளை உபயோகமாக மாற்றுவதற்காக நகைகளில் உள்ள அரக்கு மற்றும் கற்களை பிரித்தெடுக்கும் பணி தனியறையில் நடைபெற்றது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ தலைமையில், கோவை மாவட்ட துணை ஆணையர் (சரிபார்ப்பு) ரமேஷ், கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி, வேலூர் மாவட்ட வைர நுண்ணறிஞர் குமார், கோவை மாவட்ட வைர நுண்ணறிஞர் ஜீவானந்தம், கோவை மாவட்ட இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் விக்னேஷ் துளசிதாஸ், கோவில் கண்காணிப்பாளர் மல்லிகா, மேட்டுப்பாளையம் வட்ட சரக ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் தங்க நகைகளில் இருந்து அரக்கு மற்றும் கற்களை பிரித்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வங்கியில் முதலீடு
பிரித்து எடுக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றப்பட்டு பாரத் ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட உள்ளது. கடந்த 31ஆம் தேதி தொடங்கிய இந்த பணியானது வருகிற 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.