செம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

செம்பட்டி அருகே வீடு கட்டுமான பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
செம்பட்டி அடுத்த சேடப்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் பொன்வேல் (வயது 38). இவரது வீட்டின் கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று வீட்டின் மேல்தளத்தில் கான்கிரீட் அமைப்பதற்கு கம்பி கட்டும் பணி நடந்தது.
இதில் திண்டுக்கல் அனுமந்தன் நகரை சேர்ந்த சிவசக்தி (35) உள்பட 3 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். வீட்டு மாடியில் நின்று கொண்டு கம்பிகளை சிவசக்தி வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டுக்கு அருகே சென்ற மின்சார வயரில் கம்பி உரசியதாக தெரிகிறது.
இதில் எதிர்பாராதவிதமாக சிவசக்தி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசக்தி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிவசக்திக்கு காயத்திரி (32) என்ற மனைவியும், தீச்சந்த் (3) என்ற மகனும், எஸ்கிகா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.






