தொழிலாளி அடித்துக்கொலை


தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:45 PM GMT)

கீழையூர் அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற வழக்கில் அவரது மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி,:

கீழையூர் அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற வழக்கில் அவரது மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

நாகை மாவட்டம் கீழையூர் அருகே பிரதாபராமபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது வீட்டின் அருகே லலிதாவின் தாயார் சாந்தி வசித்து வருகிறார்.

அன்பழகனுக்கும், அவரது மனைவி லலிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் மாமியார் சாந்திக்கும், அன்பழகனுக்கும் இடையேயும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தகராறு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் சாந்திக்கும், அன்பழகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்பழகன் அருகில் கிடந்த பாட்டிலால் சாந்தியை தாக்கினார். இதில் அவருக்கு கண் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு வந்த சாந்தியின் மகன் சுரேஷ்குமார்(37) என்பவர், ஏன் எனது தாயை அடித்தாய்? என தட்டி கேட்டுள்ளார்.

உருட்டுக்கட்டையால் தாக்குதல்

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து அன்பழகனை சரமாரியாக தாக்கி விட்டு அவரை வாய்க்காலில் வீசிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலையில் பார்த்தபோது அன்பழகன் வாய்க்காலில் பிணமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அன்பழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

கீழையூர் அருகே தொழிலாளியை மைத்துனர் அடித்துக்கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story