தகராறை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக்கொலை


தகராறை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 7 Aug 2022 6:15 PM GMT (Updated: 7 Aug 2022 6:17 PM GMT)

தேனி அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் செய்தனர்.

தேனி

தொழிலாளி

தேனி அருகே பூதிப்புரம் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (வயது 55). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (40). மாட்டு வியாபாரி. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் வீட்டு முன்பு குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக சென்ற மகேந்திரகுமார், ராதாகிருஷ்ணனை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் மகேந்திரகுமாரிடம் தகராறு செய்து அவரை கட்டையால் தாக்கினர். அதை தடுக்க வந்த மகேந்திரகுமாரின் மனைவி வாசுகி (50), மகள் ஜனனி (20), தம்பி நாகராஜ், தங்கை ராமதிலகம் ஆகியோரையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது.

அடித்துக்கொலை

இதில் காயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மகேந்திரகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி, மகேந்திரகுமாரின் உறவினர்கள் பூதிப்புரம் பெருமாள் கோவில் முன்பு தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர், பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று போராட்டத்தை தொடர்ந்தனர்.

கைது

இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.

ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட தகவலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தெரிவித்ததோடு, மற்றவர்களை துரிதமாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து பூதிப்புரத்தில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story