தி.மு.க. பேனரை கிழித்த தொழிலாளி கைது


தி.மு.க. பேனரை கிழித்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 13 Sep 2023 8:00 PM GMT (Updated: 13 Sep 2023 8:01 PM GMT)

தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

தி.மு.க. சார்பில் வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் அமைச்சர் இ.பெரியசாமிக்கு 'கலைஞர் விருது' வழங்கப்பட உள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பழனியில் பஸ்நிலைய ரவுண்டானா, புதுதாராபுரம் ரோடு, மூலக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் நேற்று மூலக்கடை மற்றும் பஸ்நிலைய பகுதியில் வைக்கப்பட்டிருந்த தி.மு.க. பேனர்கள் கிழிக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்ட தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக தி.மு.க. நகர செயலாளர் வேலுமணி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பழனி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பேனரை கிழித்தது பழனி பத்ரா தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி மதுரைவீரன் (வயது 45) என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story