பிளாஸ்டிக் அரவை எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்கள், கை நசுங்கியது
வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் அரவை எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்கள், கை நசுங்கியது. அவரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
கோவை
வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் அரவை எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்கள், கை நசுங்கியது. அவரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
குப்பை கிடங்கு
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு வெள்ளலூரில் உள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் பரந்து, விரிந்து கிடக்கும் இந்த குப்பை கிடங்கில் மாநகராட்சி சார்பில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் குப்கைளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் குப்பைகளுடன் வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்க ளை அரைக்க தனியாக எந்திரம் ஒன்று உள்ளது.
இந்த எந்திரத் தை ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் சுத்தம் செய்து, அதில் உள்ள பிளாஸ்டிக்குகளை அகற்றுவது வழக்கம்
கால்கள் நசுங்கியது
அதன்படி நேற்று கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (வயது 23) என்பவர் நேற்று காலை வழக்கம் போல் அந்த குப்பைகளை அரைக்கும் எந்திரத்திற்குள் நின்று சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது பணிக்கு வந்த மற்றொரு நபர், சத்யா எந்திரத்தில் வேலை செய்வது தெரியாமல் சுவிட்சை ஆன் செய்தார்.
இதனால் கண் இமைக்கும் நேரத்தில் சத்யாவின் 2 கால்களும், வலது கையும் அந்த எந்திரத்தில் சிக்கி நசுங்கியது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த தொழிலாளர்கள் உடனடியாக அந்த எந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்தினர்.
மீட்பு
கனரக எந்திரம் என்பதால் சத்யாவின் 2 கால்களும், வலது கையும் நசுங்கியது. இதனால் அவரை எந்திரத்தில் இருந்து வெளியே மீட்க முடியவில்லை. இது குறித்த தகவலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள், எந்திரத்திற்குள் சிக்கி உயிருக்கு போராடிய சத்யாவை கயிறு கட்டி மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்