எள் விளைச்சல் அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி
ராமநாதபுரம் அருகே பல கிராமங்களில் எள் விவசாயம் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே பல கிராமங்களில் எள் விவசாயம் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எள் விவசாயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட விவசாயம் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் எள், கொத்தமல்லி போன்ற மானாவாரி சாகுபடி விவசாயத்திலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் அருகே தெற்குதரவை, வைரவன் கோவில், புதுக்கோவில் உள்ளிட்ட பல கிராமங்களிலும் எள் சாகுபடி விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே வைரவன் கோவில், தெற்குதரவை உள்ளிட்ட கிராமங்களில் தற்போது எள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. விவசாய நிலங்களில் வளர்ந்து நிற்கும் எள் செடிகளை முழுமையாக வெட்டி அதை கிழக்கு கடற்கரை சாலையில் போட்டு காய வைத்து செடிகளில் இருந்து எள்ளுகளை தனியாக பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைச்சல் அமோகம்
இதுகுறித்து எள் விவசாயம் செய்து வரும் தெற்குதரவை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சம்சுதீன், அவரது மனைவி சபுரன் ஜெமீலா ஆகியோர் கூறியதாவது, எங்கள் குடும்பமே விவசாய குடும்பம் தான். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் எள் விவசாய பணிகளை தொடங்குவோம். விவசாய நிலங்களில் எள் விதைகளை தூவ தொடங்கப்படும். மற்ற பயிர்களை போல் எள் செடிகள் வளர்வதற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை.
கார்த்திகையில் சீசன் தொடங்கினாலும் எள் செடிகளை அறுவடை செய்வது மாசி, பங்குனி மாதம் நடைபெறும். தற்போது அறுவடை சீசன் நடைபெற்று வருவதால் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த எள் செடிகளை அறுவடை செய்து அதை காய வைத்து செடியிலிருந்து எள்ளை தனியாக பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு எள் விளைச்சல் நன்றாகவே உள்ளது.ஆனால் இதுவரை விலை தெரியவில்லை.
நாங்கள் உற்பத்தி செய்யும் இந்த எள்ளை எங்கள் பகுதியில் உள்ள மக்களே வீட்டுக்கு நேரில் வந்து விலைக்கு வாங்கி சென்று விடுவார்கள். கடந்த ஆண்டு ஒரு படி ரூ.130 வரை விலை போனது. நயம் எள்ளாக இருப்பதால் மிகுந்த ஆர்வமுடன் வாங்கி செல்வார்கள் என்று கூறினர்.