வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை


வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை
x

வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

சுடுகாடு அருகே பிணம்

திருச்சி பொன்மலை மேலகல்கண்டார்கோட்டை சோமசுந்தர நகர் அருகே சுடுகாடு பகுதியில் நேற்று காலை ஒரு வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த பொன்மலை போலீசார், அந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு மற்றும் பொன்மலை உதவி கமிஷனர் காமராஜ், இன்ஸ்பெக்டர் திருவானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

வெட்டிக்கொலை

மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் அரியமங்கலம் அம்பிகாபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த ரமேசின் மகன் ரிஷி(வயது 19) என்பதும், அவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதும், தெரியவந்தது.

மேலும் ரிஷி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு, அவரது நண்பர்களோடு சேர்ந்து சோமசுந்தர நகர் அருகே உள்ள சுடுகாட்டு பகுதியில் மது அருந்தியதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

காதல் பிரச்சினை காரணமா?

இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ரிஷி கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story