காதல் மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற வாலிபர்
மதுரையில் காதல் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
மதுரையில் காதல் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காதல் திருமணம்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா தேவி (வயது 29). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 7 வயது, 4 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மனைவியின் நடத்தையில் சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சதீஷ்குமார் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர், மனைவி சித்ராதேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பி்ன்னர் ஆத்திரம் அடைந்து கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் சித்ராதேவி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தத்துடன் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
இந்த சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தியதுடன், சித்ராதேவியின் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குபதிவு செய்து மனைவியை கொலை செய்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.