விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இளம் பட்டுப்புழு தரம் இல்லாமல் உள்ளது


விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இளம் பட்டுப்புழு தரம் இல்லாமல் உள்ளது
x
தினத்தந்தி 1 July 2023 12:01 AM IST (Updated: 1 July 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இளம் பட்டுப்புழு தரம் இல்லாமல் இருப்பதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

ராணிப்பேட்டை

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

அதன் விவரம் வருமாறு:-

விவசாயிகள்:- ஆற்காடு வட்டத்தில் விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைத்ததற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகைகள் நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

கலெக்டர்:- பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுப்பட்டா நிலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்குவது நிலுவையில் உள்ளது. மேலும் கூடுதலாக பணம் வேண்டி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் எந்தெந்த பகுதிகளில் இது போன்ற நிவாரணம் கேட்கின்றீர்கள் என தனியாக மனு அளிக்கலாம்.

விவசாயிகள்:- கலவை வெள்ளம்பி ஏரியிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

கலெக்டர்:- நீர்வள ஆதாரத் துறையினர் ஆய்வுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலத்தடிநீர் பாதிப்பு

விவசாயிகள்:- காட்டுப் பன்றி, மான் போன்ற வன விலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்தி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காண வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுநீர், பாலாற்றில் கலந்து வருவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர்:- விவசாயிகள் தெரிவிக்கும் இடங்கள் மற்றும் ஏரிகளில் ஆய்வு செய்து அதன் தரத்தினை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

மணல் குவாரி

விவசாயிகள்:- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் விவசாய நிலங்களில் 50 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு இதுவரையில் விவசாயிகள் மின் இணைப்பிற்கான பணம் செலுத்தி மின் இணைப்பு வழங்கவில்லை.

சக்கரமல்லூர், வளவனூர் பகுதிகளில் மணல் குவாரிகள் அமைக்க கூடாது. அனந்தலை, படியம்பாக்கம் பகுதிகளில் கல் குவாரிகள் இயங்குவதால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கால்நடை தீவனங்கள் மீது தூசு படிந்து கால்நடைகள் சாப்பிட முடியாத நிலையில் உள்ளது. தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்ததற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

தரமாக இல்லை

கலெக்டர்:- மாவட்டத்தில் 732 தோட்டக்கலை விவசாயிகளுக்கு சேதஅறிக்கை அளிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 137 விவசாயிகளின் வங்கி கணக்குகள் சரியாக இல்லாத காரணத்தினால் நிலுவையில் உள்ளது. இவைகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. முடிவுற்றவுடன் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

விவசாயிகள்:- பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கிய இளம்பட்டுப்புழு தரம் இல்லாமல் உள்ளது. இதனால் 450 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மல்பெரி செடிகள் நாசமாகி உள்ளது. அதிகப்படியான விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில் இளம் பட்டுப்புழு விற்பனை மையம் இருந்தும், தர்மபுரியில் வாங்க சொல்கின்றார்கள். இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட வன அலுவலர் கலாநிதி, வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா, பேராசிரியர் முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story